பகுதி - 13
கேள்வி: ஒரு வேளை கவுன்சலிங்கில் நல்ல கல்லூரி கிடைக்காவிட்டால் என்ன செய்வது? எனக்குப் பிடித்த Deemed universityயில் முன்பணம் கொடுத்து Management seat பதிவு செய்து வைக்கலாமா?
பதில்:
தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொறியில் படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றிலேயே தற்போது வர வர இடங்கள் நிறைவது இல்லை.
நீங்கள் கலந்தாய்வுப் படிவம் நிரப்பவுதில் மிக முட்டாள்தனமான / கவனக் குறைவான பிழை விட்டால் ஒழிய,
உங்களுக்கு ஏற்ற கல்லூரி கிடைக்கவில்லை என்ற நிலையே வராது.
ஒரு கல்லூரி இல்லாவிட்டால் இன்னொரு கல்லூரி, அதே சமமான தரத்தில் கண்டிப்பாக கிடைக்கும்.
நீங்கள் முன்பணம் தந்து ஒரு Deemed universityயில் இடம் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
ஒவ்வொரு நிகர்நிலைப் பல்கலைக்கும் ஆள் பிடித்துத் தர என்றே நிறைய தரகர்கள் சுற்றுகிறார்கள்.
நீங்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் உங்களிடம் பீதியைக் கிளப்பி பணம் கறப்பதில் அவர்கள் வல்லவர்கள்.
கவுன்சிலிங்கில் நீங்கள் எதிர்பார்த்த இடம் கிடைத்த பிறகு சம்பந்தப்பட்ட பல்கலையில் போய் கட்டிய பணத்தைக் கேட்டால்,
யானை வாயில் போன கரும்புக் கட்டு கதை தான்.
ஏதோ ஒரு போதாத காலம், கவுன்சிலிங்கில் சொதப்பி விட்டீர்கள் என்றாலும்,
நல்ல மதிப்பெண்ணோடு நிகர்நிலைப் பல்கலைகளை அணுகினால் அவர்கள் கவுன்சிலிங் கட்டணம் அடிப்படையிலேயே உங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். எங்குமே படிக்க முடியாத நிலை வரவே வராது. முன் கூட்டியே பணம் கட்டத் தேவையே இல்லை.
ஆக, தரகர்கள் ஜாக்கிரதை!