பகுதி - 19

கேள்வி: தமிழ்நாட்டில் என்னென்ன வகை பொறியியல் கல்லூரிகள் உள்ளன? ஒரு மாணவர் கல்லூரிகளை எப்படி வகைமைப்படுத்திக் கொள்ள வேண்டும்?

பதில்:

tneaonline.org தளத்தில் சென்று பார்த்தால், இடப்பக்கம் உள்ள இணைப்புகளில்,

Information about Colleges என்று ஒரு இணைப்பு இருக்கும். அதில் எல்லா கல்லூரிகளையும் வகைமைப்படுத்தியும், அகர வரிசைப்படுத்தியும் தந்திருக்கிறார்கள். (மறுமொழியில் இணைப்பு உள்ளது)

இதில் உள்ள கல்லூரி வகைகளாவன:

1. University Departments

இது அந்தக் காலத்து அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லூரிகளைக் குறிக்கும். ஏற்கனவே இருந்த CEG, ACT, MIT, SAP ஆகியவற்றுடன் இப்போது கடலூர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியையும் இதில் சேர்த்து இருக்கிறார்கள்.

2. Government Colleges

இவை அரசு கலைக் கல்லூரி போல் அந்தந்த ஊர்களில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகும். 1945 தொடங்கிய GCT கோவை தொடங்கி 11 கல்லூரிகள் இவ்வாறு உள்ளன. கோவை, காரைக்குடி, சேலம் கல்லூரிகள் பெயர் பெற்ற கல்லூரிகளாக உள்ளன. 2012-13 காலப்பகுதியில் தஞ்சை, திருச்சி, தேனி, தர்மபுரியில் புதிதாகத் தொடங்கப்பெற்ற கல்லூரிகளும் இப்பட்டியலில் உள்ளன. ஈரோட்டில் இருந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பொறியியல் கல்லூரியும் இப்போது அனைவருக்குமான அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது.

3. Government aided colleges

தமிழ்நாட்டில் மொத்தமே 3 கல்லூரிகள் தான் அரசு உதவி பெறும் தனியார் நிருவாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள். PSG கோவை, CIT கோவை, தியாகராஜா மதுரை. இவை தமிழ்நாட்டின் Top 10 கல்லூரிகளில் வருவன. இடம் கிடைத்தால் கண்ணை மூடிக் கொண்டு சேர்த்து விடுங்கள்.

4. Central institutes

ஒன்றிய அரசால் நடத்தப்படும் மூன்று சிறப்புத் துறை சார் கல்லூரிகள் இப்பட்டியலில் உள்ளன.

CECRI என்று அழைக்கப்படும் காரைக்குடியில் அமைந்துள்ள Central Electrochemical Research Institute

இது தான் இப்பிரிவின் கீழ் வரும் ஒரே ஒரு உருப்படியான கல்லூரி, தமிழ்நாட்டின் Top 10 கல்லூரி.

இங்கு இருப்பதே ஒரே ஒரு படிப்பு தான்.

CHEMICAL AND ELECTRO CHEMICAL ENGINEERING

இடம் கிடைத்தால் கட்டாயம் சேருங்கள்.

CECRI தவிர்த்த மற்ற இரு ஒன்றியக் கல்லூரிகள் Plastic, textile தொடர்பான பாடங்கள் நடத்துகிறார்கள். அங்கு சேர வேண்டாம்.

5. Constituent colleges

இவை அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள உறுப்புக் கல்லூரிகள். இவற்றையும் அரசு கல்லூரிகளாகக் கருதலாம். பல முன்னணி மாணவர்கள் சேர்கிறார்கள்.

கட்டணம் குறைவு என்பதும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த ஒரே காரணத்துக்காக இங்கு சேர வேண்டாம்.

பெரும்பாலும் புதிதாக கடந்த 15 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கல்லூரிகள் என்பதால் தரம், வசதி, வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பது சிரமம். தவிர, இவை பல பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளதும் ஒரு மைனசாகப் பார்க்கப்படலாம்.

திருச்சியில் அமைந்துள்ள University College of Engineering, Tiruchirappalli, (Bharathidasan Institute of Technology) மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு. இது Top 15 அரசு கல்லூரிகளில் வரும். இங்கு இடம் கிடைத்தால் சேர்க்கலாம்.

அதற்கு அடுத்து கோவையில் உள்ள Anna University Regional Campusலும் முன்னணி மாணவர்கள் சேர்கிறார்கள். ஆனால், இது கோவையில் அமைந்திருப்பதும் ஒரு முக்கியக் காரணமாக கருதலாம்.

6. Self financing colleges

இவை நாம் அனைவரும் அறிந்த தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள். 400க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் 100 கல்லூரிகளைத் தவிர மற்ற எதில் சேர்ப்பதும் risk தான். இந்த 100 கல்லூரிகள் பட்டியல் அடுத்தடுத்த பாகங்களில் தருகிறேன்.

பொதுவான குறிப்புகள்:

  • நல்ல மதிப்பெண்கள் உள்ள மாணவர்கள் அரசு கல்லூரி, கட்டணம் குறைவு என்ற காரணத்துக்காக மட்டும் அல்லாமல் வேறு நல்ல முன்னணி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தால் அங்கு சேர்வது நன்று.
  • பொதுவாக, தனியார் / அரசு கல்லூரிகளில் Autonomous தகுதி உள்ள கல்லூரிகள் சற்று தரம் கூடியவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  • அரசு கல்லூரிகளில் பாடப்பிரிவுப் பெயருக்குப் பின் (SS) என்ற குறிப்பு இருந்தால் அது self supporting என்று பொருள்படும். அதன் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு கட்டுபடியானால் மட்டும் சேருங்கள்.
  • ஒரு வேளை கவுன்சலிங்கில் நேர்ந்த தவறால், தனியார் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், குறிப்பிட்ட கல்லூரியில் சேர்ந்த ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரடியாக அவர்களை அணுகி Management seat பெற முயலலாம்.
  • மேலே குறிப்பிட்ட 6 வகைக் கல்லூரிகள் தவிர, Deemed Universities எனச் சொல்லப்படும் நிகர் நிலைப்பல்கலைகழகங்களும் பொறியியல் படிப்புகளை வழங்குகின்றன. புகழ்பெற்ற வேலூர் VIT இத்தகைய கல்லூரி தான். அத்தகைய கல்லூரிகளில் சேர நேரடியாக அவர்களை அணுகுங்கள். அவர்கள் கவுன்சலிங்கின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பது இல்லை.
Source article link