பகுதி - 25
முதல் இரு சுற்று கலந்தாய்வுகளுக்கான அணுகுமுறைகளைக் கடந்த பாகங்களில் கண்டோம்.
அடுத்தடுத்து நடைபெறக்கூடிய நான்கு சுற்றுகளுக்கும் இதே போன்ற அணுகுமுறையை நீங்கள் மேற்கொள்ளலாம்.
- முதல் சுற்று - கடந்த ஆண்டு எந்தக் கல்லூரியில் எந்த rankக்கு எந்தப் படிப்பு கிடைத்துள்ளது என்று பாருங்கள்.
- இரண்டாவது சுற்று - முதல் சுற்று முடிந்த பிறகு எந்தெந்த கல்லூரிகளில் அதிகம் பேர் இடங்களைப் பெற்றுள்ளார்கள் என்பதைப் பார்த்து அவற்றுக்கு முன்னுரிமை தாருங்கள்.
- அதே போல், மூன்றாவது சுற்றுக்கு இரண்டாவது சுற்று நிலவரத்தைப் பாருங்கள்.
- நான்காவது சுற்றுக்கு மூன்றாவது சுற்று நிலவரம் அடிப்படை.
இந்த அனைத்துச் சுற்றுகளிலும் குறைந்தது 10 பேர் கூட சேராத கல்லூரிகளை முற்றிலும் ஒதுக்கி விடுங்கள்.
உங்களை விட தரநிலை அதிகம் உள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளை நாடுங்கள்.
இந்த ஆண்டு மூன்றாவது, நான்காவது சுற்று கலந்தாய்வுகள் முடிந்த பிறகு, அந்தத் தரவுகளையும் தொகுத்து இந்தத் தொடர் இலவச PDFஆக வெளியிடப்படும்.
அதற்கு முன் நிறைவாக சில வார்த்தைகள்:
நீங்கள் கல்லூரி choice filling செய்து முடித்த பிறகு (இதைச் செய்ய எப்படி TNEA தளத்தில் பதிவு செய்வது, பணம் கட்டுவது போன்ற விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பு மறுமொழியில்),
ஒரு முக்கியமான கட்டம் உள்ளது.
அது தான் Tentative allotment.
இது Choice filling காலகெட்டு முடிந்த அடுத்த நாள் உடனடியாக வெளியிடப்படும்.
இதில் உங்கள் தரநிலை, விருப்பம், இட ஒதுக்கீடு அடிப்படையில் உத்தேசமாக எந்தக் கல்லூரி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்வார்கள்.
நீங்கள் கேட்ட முதல் தெரிவே கிடைத்தால் வாழ்த்துகள். ஏற்றுக் கொள்ளுங்கள்.
இல்லை, முதல் தெரிவுக்குக் கீழே 6ஆவது, இல்லை 60ஆவது விருப்பம் தான் கிடைக்கிறது என்றால்,
I accept current allotment and opt for upward movement. If allotted in upward movement, I confirm.
என்று ஒரு தெரிவு இருக்கும். இதனைக் குறிப்பிட்டு உங்களுக்குக் கிடைத்த இடத்தை ஒப்புக் கொள்ளுங்கள்.
இந்தத் தொடரில் இது வரை கூறிய அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்றி இருந்தால்,
இந்த முடிவை எடுப்பதில் தயக்கம் வரக்கூடாது.
இதன் மூலம், வேறு மாணவர்கள் யாராவது அவர்களுக்குக் கிடைத்த இடம் பிடிக்காமல் விட்டுப் போனால், அந்த இடத்துக்கு உங்களை நகர்த்துவார்கள்.
ரயில் டிக்கெட்டில் waiting listல் இருந்து RAC ஆகி confirm ஆவது போலத் தான்.
அப்படி யார் விட்டுப் போவார்கள், நமக்கு இதை விட என்ன சிறந்த இடம் கிடைத்து விடப் போகிறது என்று நினைத்து விடாதீர்கள். எப்போதுமே நம்மை இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்குத் துடிப்பானேன் என்று தான் பழக்கி வைத்திருக்கிறார்கள்.
நான் உதவிய ஒரு மாணவருக்கு 7ஆவது தெரிவு தான் கிடைத்தது. அது தர நிலை 80க்கு மேல் உள்ள தனியார் கல்லூரியில் computer science படிப்பு. அதுவே போதும் என்று இறுதி செய்து ஏற்றுக் கொண்டு விட்டார்.
ஆனால், Confirm முடிவு வந்த பிறகு பார்த்தால், அவர் ஒருவேளை Upward movementக்கு ok சொல்லி இருந்தால்,
தர நிலை 30 உள்ள அரசு கல்லூரியில் IT படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இந்தக் கல்லூரியோ அவரது 3ஆவது தெரிவாக இருந்தது.
ஆகவே, பல இடங்கள் உயர்ந்து கூட மேம்பட்ட கல்லூரி கிடைக்க வாய்ப்பு உண்டு.
குறிப்பாக, உங்கள் எல்லா தெரிவுகளும் பல்வேறு கல்லூரிகளில் போட்டி மிகுந்த CS போன்ற பாடங்களாக இருந்து,
நடுவில் ஒரு தெரிவு மட்டும் முன்னணிக் கல்லூரியில் ECE, IT போன்ற பாடங்களாக இருந்தால் அது கிடைப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு.
எனவே, கல்லூரியா பாடப்பிரிவா எது என்ற முடிவை எடுக்க வேண்டிய நேரமாக இது அமையும்.
இறுதியில் இப்படி ஒரு சிக்கலான முடிவை எடுக்க வேண்டிவரும் என்பதை உணர்ந்து,
முதலில் தெரிவுகளை நிரப்பும் போது நன்கு சிந்தித்து நிரப்புங்கள்.
நீங்கள் ஏற்றுக் கொண்டு படிக்க விரும்பாத ஒரு தெரிவையும் சும்மா இட்டு நிரப்பாதீர்கள்.
அதே போல், தகுந்த காரணம் இன்றி, கிடைத்த இடத்தை நிராகரிப்பது, அடுத்து சுற்று கலந்தாய்வுக்கு நகர்வது போன்ற முடிவுகளை எடுக்காதீர்கள்.
அவ்வாறு முடிவு எடுக்க இரண்டே காரணங்கள் தான் இருக்க வேண்டும்:
- நீங்கள் படிவம் நிரப்பியதில் பிழை. ஒரு தவறான கல்லூரியைத் தெரியாமல் முதல் தெரிவாக இட்டு விட்டீர்கள். அல்லது, நிரப்பிய எல்லா தெரிவுகளுமே தவறு என்று உணர்கிறீர்கள்.
- நல்ல கல்லூரியில் Management seat உறுதி செய்து விட்டீர்கள்.
நல்ல மதிப்பெண் உள்ளவர்கள் அடுத்த சுற்று கவுன்சலிங்குக்கு நகராமல் Management seat வாங்கி விடுவது உத்தமம். ஏனெனில், ஒவ்வொரு சுற்று கவுன்சிலிங்கின் போது தர வரிசை 15000 முதல் 40000 வரை கீழே போய் விடும். அதற்குக் கலந்து கொள்ளாமலே இருக்கலாம்.
எல்லாம் சுபமான பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்குப் Provisional allotment order தருவார்கள்.
அதனை எடுத்துக் கொண்டு அதில் குறிப்பிட்ட தேதிக்குள் நேரடியாகக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.
அங்கு செல்லும் போது அவர்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களின் ஒரிஜினலையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதைச்செய்வதற்குக் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே கிளம்பி செல்லுங்கள்.
எந்த ஐயம் என்றாலும் அந்தக் கல்லூரி அலுவலகத்திற்குப் போன் அடியுங்கள். விளக்கமாகச் சொல்வார்கள்.
கல்லூரியில் சேர்வது முதற் படி தான்.
எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் அங்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது தான் உங்களை வெற்றி பெற வைக்கும்.
கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்வது பற்றி இன்னொரு தொடரில் சந்திப்போம்.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
(கலந்தாய்வு, கல்லூரி தேர்ந்தெடுப்பது குறித்து பயனுள்ள இணைப்புகள்)